நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தை பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் திரைப்பட தணிக்கை வாரியத்தின் பிரச்சினைகளால் படத்தின் வெளியீடு தாமதமானது. இந்நிலையில், ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் முழுமையாக வெளியாகியுள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜனநாயகன் படத்தை அடுத்த வாரம் ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஜனநாயகன் பட விவகாரத்தில் எந்த அளவு உதவ முடியுமோ அதனை செய்து கொடுப்போம் என்றும் சுப்பிரமணியன் கூறினார். திருப்பூர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், "ஜனநாயகன் திரைப்படம் வெளியிடப்பட்டது பெரிய அதிர்ச்சி. இந்த திரைப்படம் 2026-ல் பெரிய படமாக எதிர்பார்க்கப்பட்டது. அது இவ்வாறு வெளியிடப்பட்டது திரைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளருக்கு 400 முதல் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். தேர்தல் முடிவடைந்த பின்னர் இந்த படம் வெளியிடப்படும். மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்த்திருந்தோம். ஏற்கனவே ஓடிடி உரிமம் வழங்கப்பட்ட நிலையில் பட வெளியீடு தள்ளிப் போனதால் ஓடிடி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதேபோல விநியோகஸ்தர்களும் 70 கோடி ரூபாய் அளவில் தயாரிப்பாளரிடம் பணம் கொடுத்துள்ளனர். அவர்களும் அந்த பணத்தை திரும்பக் கேட்பார்கள். எப்படி இருந்தாலும் தயாரிப்பாளருக்கு தான் அனைத்து நஷ்டமும் ஏற்படும். இந்த வாரம் சென்சார் சான்றிதழ் பெறப்பட்டு 10ஆம் தேதி அளவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்த்திருந்தோம். விடுமுறை காலம் என்பதால் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என்றும் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த படம் தற்போது இணையத்தில் வெளியாகி இருப்பது அனைவருக்கும் வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் கடந்த படங்கள் 100 கோடியைக் கடந்து தமிழகத்தில் வசூல் செய்திருக்கிறது. அதன்மூலம் 50 கோடிக்கு மேல் திரையரங்குப் பங்கு இருந்த நிலையில் இந்த படம் இனி திரையரங்கில் வெளியானாலும் அந்த அளவு வசூல் ஈட்டுமா என்பது சந்தேகமே. இந்த இக்கட்டான சூழலில் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி அவருக்கு எந்த அளவு உதவ முடியுமோ அதனை செய்து கொடுப்பது என தீர்மானித்துள்ளோம். படத்திற்கான சான்றிதழ் பெற்று அடுத்த வாரம் உடனடியாக படத்தை ரிலீஸ் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்." எனத் தெரிவித்தார்.
சுலோசனா பூவிலிங்கம் இறைவனடி சேர்ந்தார்...
ஆறுமுகம் மனோன்மணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி..
Latest updates and news